Saturday, July 28, 2012

பங்குசந்தையில் சிறு முதலீட்டாளர்களுக்கு சில தகவல்கள்!!!


          இந்திய பங்குசந்தையில் சிறுமுதலீட்டாளர்களின் பங்களிப்பு குறப்பிடத்தக்கது.  ஆனால் இன்றைய சூழ்நிலையில் பங்குச்சந்தையால் மிக அதிகமாக பாதிக்கப்படுவதும் இவர்களே!

          உலகத்திலேயே அதிக இளைஞர்களைக் கொண்ட நாடு , உலகிலேயே மிகப்பெரிய ஜனநாயக நாடு. எனவே நமது பங்குசந்தை அடுத்த 15-25 ஆண்டுகளில் மிகப்பெரிய அளவில் உயரவே வாய்ப்புள்ளது என்றும் மேலும் கடந்த 20 ஆண்டுகளாக இந்திய பங்குச்சந்தை வருடத்திற்கு 15-25%  லாபம் கொடுத்துள்ளது என்றும் பொருளாதார மேதைகளால் அடிக்கடி சொல்லப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் பங்கு தரகு நிறுவனங்கள் போலியான பல கவர்ச்சிக்கரமான விளம்பரங்களை வெளியிடுகின்றன, அதை நம்பி சிறுமுதலீட்டாளர்கள் அதிக அளவில் பங்குசந்தையில் நுழைந்து பெருத்த நஷ்டத்தை அடைவது தற்பொழுது மிக மிக அதிகமாக உள்ளது. மேலும் அடைந்த நஷ்டத்தை ஈடுக்கட்டுகிறேன் என்று மேலும் மேலும் நஷ்டத்தை அடைவதும், தொடர்ந்து நஷ்டம் வந்தாலும் ஒருவித போதை போல தொடர்ந்து பங்குசந்தையில் ஈடுபட்டு மேன்மேலும் நஷ்டமடைவதும் சிறுமுதலீட்டாளர்கள் தான். இதை முறைப்படுத்த எந்த சட்டமும் நம்நாட்டில் இல்லை. இன்று வர்த்தகத்தில் ஈடுபடும் எத்தனை சிறுமுதலீட்டாளர்களுக்கு பங்குசந்தையைப் பற்றிய அடிப்படை அறிவு தெரியும்?


 1)       கடந்த காலத்தில் நமது பங்குச்சந்தை 20% அளவிற்கு லாபம் கொடுத்ததற்கு முக்கிய காரணமாக அரசியல் ஸ்ரத்தன்மை உடையதாக இருந்தது, அனால் இன்று ஆளும்கட்சி அதன் கூட்டணி கட்சிகளின் நெருக்கடி காரணமாக என்ன பாடுபடுகிறது என்பதை நான் சொல்லித் தெரிய தேவை இல்லை. இதேபோன்ற நிலைதான் வருங்காலத்திலும் தொடரும் எனவே நாட்டின் வளர்ச்சிவேகம் நிச்சயம் குறையும், அதனால் அதன் தாக்கம் வரும்காலத்தில் நமது பங்குசந்தையிலும் நிச்சயம் எதிரொலிக்கும்.


2)        உலகப்பொருளாதாரம் மிகவும் பலவீனமாக உள்ளதென்றால் நம் நாட்டின் பொருளாதாரம் அதை விட பலவீனமாக  (Under Perform) உள்ளதை நம்நாட்டு நிறுவனங்களின் நிதிநிலை அறிக்கைகள் தெளிவாக எடுத்துக்காட்டுகின்றன. 100க்கு 75 நிறுவனங்களின் லாபம் பெருமளவில் சரிந்துள்ளன. இந்த நிலையில் நமது பங்குச்சந்தை எப்படி உயரும்?


3)        இந்த வருடம் நாடு முழுவதும் மழையின் அளவு மிக மிக குறைவு, மேலும் பல மாநிலங்கள் வறட்சியின் கோரப்பிடியில் உள்ளது.


4)        நாட்டின் பணவீக்கம் மற்றும் வட்டி விகிதங்கள் மிகவும் அதிகமாக உள்ளது, நாட்டின் தொழிற்வளர்ச்சி மிகவும் குறைவாக உள்ளது. இந்திய ரூபாயின் மதிப்பு அமெரிக்க டாலருக்கு எதிராக கடுமையாக வீழ்ந்துள்ள நிலையில் இறக்குமதியையே பெருமளவில் சார்ந்துள்ள நம்நாட்டின் பங்குச்சந்தை எப்படி உயரும்?


          ஆனால் இது எதுவும் சிறுமுதலீட்டாளர்களுக்கு தெரிவதில்லை, தெரிந்துக்கொள்ளவும் விரும்பவில்லை ஆனால் 10000 ருபாயை பங்குசந்தையில் போட்டால் ஒருவருடத்தில் இரட்டிப்பாகிவிடும் என்று எவரேனும் சொன்னால் இன்னமும் நம்பிக்கொண்டுள்ளார்கள்...

No comments: